ஏலத்தில் பல லட்சத்திற்கு விலை போன ஆடை!
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று அசத்தினார் ஏ.ஆர். ரஹ்மான். இதனையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து உலகளவில் பிரபலமடைந்தார் ஏ.ஆர். ரஹ்மான். இவரின் பாடலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உலகெங்கிலும் இருக்கின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 1997ஆம் ஆண்டு இவரது இசையமைப்பில் வெளிவந்த ‘வந்தே மாதரம்’ பாடல் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதையடுத்து இந்திய அளவில் கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மாறினார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28வது தின விழாவில் ஒருபகுதியாக மாற்றுத்திறனாளிகள் ஆடைகள் வாங்க உதவும் திட்டத்தின் கீழ் ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடை ஏலம் விடப்பட்டது.
இதில் அவர் அணிந்திருந்த ஆடை ரூ.6.75 லட்சத்துக்கு விற்பனையானது. பிரமோத் சுரடியா என்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்திருந்த ஆடையை ஏலத்தில் வாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஏலத்தில் விடப்பட்டது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.