புதிய வகை நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில், கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
புதிய வகை நோய் தொற்றுக்கு இடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதன் மூலமாக புதிய வகை நோய் தொற்று மேலும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் பல்வேறு மாநிலங்களும் கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இருக்கின்றன. ஒடிசா, புதுடில்லி, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் புதிய வகை நோய்த்தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு சார்பாக வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில், கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறியதை கருத்தில் வைத்து பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் எல்லோரும் கூட்டமாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில்,கூடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது தமிழக அரசு. தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் நிச்சயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து விதமான கடைகள் வணிக வளாகங்கள் ,திரையரங்குகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கின்ற நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், புதிய வகை நோய் தோற்று உலகில் 108 நாடுகளில் பரவல் 1 லட்சத்திற்கும் மேலாக புதிய வகை நோய் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. உலக அளவில் 26 பேர் இந்த நோய் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரையில் நம் நாட்டில் 358 பேர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்,
அவர்களின் 120 பேர் வெளிநாட்டிற்கு பயணம் செய்தவர்கள் நாட்டில் இருக்கின்ற நோய் தொற்று பாதித்தவர்களில் 90% பேர் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். அவர்களில் மூன்று பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். இந்த புதிய வகை நோய் தொற்று உறுதியானவர்கள் 70% நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை, 61 சதவீதம் பேர் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய அளவில் 18 லட்சத்து 10 ஆயிரத்து 83 தனிமைப்படுத்தும் படுக்கைகள், 4 லட்சத்து 94 ஆயிரத்து 314 ஆக்சிஜன் படுக்கைகள், 1 லட்சத்து 39300 ஐசியு படுக்கைகள், 24507 குழந்தைகளுக்கான ஐ.சி .யு படுக்கைகள் மற்றும் 64 ஆயிரத்து 796 குழந்தைகளுக்கான சாதாரண படுக்கைகள், இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே நோய்த்தொற்று பாதுகாப்பு நடத்தையை பின்பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும், டெல்டாவுக்கான சிகிச்சை நெறிமுறைகள் இந்த புதிய வகை நோய்களுக்கும் பொருந்தும். நோய்தொற்று முதல் அலையை விட இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தேவை என்பது பத்து மடங்கு அதிகரித்து இருந்தது.
இதன் காரணமாக, ஒரு நாளைக்கு 18 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்துவதில் 11 மாநிலங்கள் தேசிய சராசரியை விட குறைவாக இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது, இதுவரையில் 89 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும் இரண்டாவது தவணையை 61 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.