50க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரேநாளில் கைது! இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

0
183

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருப்பது மீனவர்களின் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக சொல்லப்படுகிறது.

நேற்று காலை தனுஷ்கோடிக்கும், நெடுந்தீவுக்கும், இடையே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் லியோன், ஆல்தான், பீட்டர், கருப்பையா, தென்னரசு, உள்ளிட்டோருக்கு சொந்தமான 6 விசைப் படகுகளையும், கோபி, சக்தி, பிரபு, உள்ளிட்ட 43 மீனவர்களையும், சிறைபிடித்து அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் நேற்று நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தால், ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்தி இருக்கிறார்கள். இதில் கைதான 43 பேரையும், 31ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர் என சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 50க்கும் அதிகமான விசைப்படகுகள் மூலமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள்.

தலை மன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும்,இடையே இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அங்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையை சார்ந்தவர்கள் ஹரிதாஸ் மற்றும் அவருடைய அண்ணன் அருளானந்தத்திற்கு சொந்தமான இரண்டு விசைப் படகுகளையும், சிலுவை, மைக்கேல், ராமநாதன், ஜாக்சன், அந்தோணி ,உள்ளிட்ட 12 மீனவர்களையும், கைது செய்து தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இவர்கள் எல்லோரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 55 மீனவர்களை கைது செய்து இருப்பது மீனவர்களிடையே சோகத்தை உண்டாக்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க தெரிவித்தும், இனி இதுபோன்று எந்தவிதமான சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, ராமேஸ்வரம் கடல் பகுதியில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன.

நிலவரம் இவ்வாறு இருக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மீனவர்கள் கைது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் முதலமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியிருக்கின்ற கடிதத்தில், கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சம்பவங்களில் 55 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையின் காரணமாக, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது இது குறித்து தமிழக அரசு சார்பாக பல்வேறு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. 2021ல் மட்டும் 19 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுடைய வாழ்வாதாரமான படகுகளை விடுவிக்கபடுவதில்லை என குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த வருடத்தில் மட்டும் இரண்டு சம்பவங்களில் ஒட்டுமொத்தமாக ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை இவ்வாறு குறுக்கு வழியில் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளை இனியும் அனுமதிக்க கூடாது என தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அதிகாரிகளிடம் கொண்டு செல்லவேண்டும், 55 மீனவர்களையும் இலங்கை வசம் இருக்கின்ற 73 படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.