நோய் தொற்றினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் மட்டும் தான் அவர்களது உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை இருந்து வருகிறது.
இதனால் இந்த மருந்து வாங்குவதற்காக ஐந்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதோடு இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆக்ஸிஜன் சிலிண்டரை கள்ளச்சந்தையில் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ரெம்டிசிவர் போன்றவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் அதிக அளவிற்கு விற்பனை செய்யப்படுவது குறித்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய்த்தொற்று காரணமாக, அவதியுறுகிறார்கள். அவர்களை காப்பாற்ற அரசு தினறி வருகிறது.இப்படியான சூழ்நிலையில், உயிர்காக்கும் மருந்துகளை இப்படி கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது பொதுமக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.