கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மனு கொடுப்பதற்காக வருகை தந்தார்கள். கோயம்புத்தூரில் நோய்த்தொற்று தடுப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும், அரசு விழாக்களுக்கு அதிமுக சட்டசபை உறுப்பினர்களை அழைக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அமர்ந்தபடியே மனுவை வாங்கிய சமயத்தில், சட்டசபை உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட ஒரு சிலர் எழுந்து நின்று மனுவை வாங்க மாட்டீர்களா? என்று மிரட்டும் விதமாக பேசியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று மனுவை வாங்கினார் அதேபோல அங்கிருந்த மற்ற அதிமுகவைச் சார்ந்தவர்களும் மாவட்ட ஆட்சியரை மிரட்டும் விதத்தில் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. மனு அளித்த பின்னர் அதிமுகவின் சட்ட சபை உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகளை புறக்கணிக்கும் சூழ்நிலையை தவிர்த்துவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
அந்த சமயத்தில் மாவட்ட ஆட்சியரை அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் மிரட்டும் விதமாக உரையாற்றியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி எந்த விதமான பதிலையும் தெரிவிக்காமல் கிளம்பிச் சென்றுவிட்டார். இந்த சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மிரட்டும் வகையில் நடந்து கொண்ட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இனிமேல் இதுபோன்ற தவறான செயல்கள் நடக்காத விதத்தில் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது. அதேபோல திமுகவைச் சார்ந்தவர்களும், அதிமுக சட்ட சபை உறுப்பினர்களுக்கு எதிராக புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.