கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம்!

0
135

கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம்!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு ஆடை கட்டுபாட்டை கொண்டு வந்து, சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுபாட்டை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிடக்கோரி இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனிடையே, கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதன் காரணமாக, கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை யாரும் அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர். இந்நிலையில், அம்மாநிலத்தின் விஜயபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியும் இன்று திறக்கப்பட்டது. அப்போது, அந்த கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

அப்போது, அந்த மாணவிகளிடம் பர்தா அணிந்து கல்லூரிக்குள் வர அனுமதியில்லை என்று கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கூறினர். இதனால், அந்த மாணவிகள் கல்லூரி வாயில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த கல்லூரி முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.