சத்தமே இல்லாமல் சமூக சேவை செய்யும் காமெடி நடிகர் கவுண்டமணியின் மகள்..!!
தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடி என்றால் அது கவுண்டமணி தான் எனும் அளவிற்கு ஒரு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். 80கள் தொடங்கி இப்போது வரை கவுண்டமணியின் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரின் டைமிங் காமெடியை எப்போதும் யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது. சரியான நேரத்தில் கவுண்ட்டர் அடிப்பதால் தான் இவரை கவுண்ட்டர் மணி என்று அழைத்து வந்தார்கள்.
அந்த பெயர் நாளடைவில் மருவி கவுண்டமணியாகி விட்டது. கரகாட்டக்காரன் படத்தில் செந்திலுடன் இணைந்து இவர் செய்யும் வாழைப்பழ காமெடி இன்றும் பிரபலம். இப்படி உதாரணமாக பல காமெடிகளை கூறலாம். ஆனால் கவுண்டமணி ஒரு கட்டத்திற்கு மேல் நடிப்பதை நிறுத்தி விட்டார். சினிமாவில் இருந்தும் முற்றிலுமாக விலகிய இவர் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
இறுதியாக கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி மற்றும் சுமித்ரா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கவுண்டமணியின் மகள் சுமித்ரா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சுமித்ரா சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் காப்பகத்திற்கு அவரால் முடிந்த பல உதவிகளை செய்து வருகிறாராம். பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் புற்றுநோயாளிகளுக்கு சுமித்ராவும் அவரின் கணவர் வெங்கடாச்சலமும் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறார்களாம். அதன்படி ஒவ்வொரு மாதமும் இங்கு வரும் இவர்கள் முதியவர்கள் குழந்தைகள் என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார்களாம்.
ஆனால் இவர்கள் செய்யும் இந்த உதவி மீடியாவில் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதை வெளிச்சம் போட்டு பிரபலம் தேடிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லையாம். எனவே எந்தவித பலனையும் எதிர்பாராமல் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். பலரும் இவர்களின் இந்த செயலை பாராட்டி வருகிறார்கள்.