எப்போது பள்ளிகள் திறப்பு? – தமிழக அரசு முக்கிய முடிவு

0
149

எப்போது பள்ளிகள் திறப்பு? – தமிழக அரசு முக்கிய முடிவு

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

வரும் ஜுன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டான 2020 – 21ல் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க, கல்வி அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கவும், பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக நடத்தும் முறைகளை கண்டறியவும் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் “கொரோனா பிரச்னையால், கற்றல், கற்பித்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காணும் முறைகளை கண்டறிய வேண்டும். புதிய கல்வி ஆண்டை, துவங்குவது தாமதமாகும் என்பதால், எப்போது பள்ளிகளை திறப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். இடைபட்ட காலத்தை, மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும். ஆசிரியர், மாணவர் இடைவெளியை குறைத்து, தொழில்நுட்ப வழியில் பாடங்களை நடத்தும் முறைகளை கண்டறிய வேண்டும்.

இதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட துறை, கல்வி தொலைக்காட்சி, பெற்றோர் ஆசிரியர் கழகம், யுனிசெப், தமிழக இ – சேவை, சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்த குழுவில் இடம் பெறுவர். இந்த குழுவினர், ஆய்வுகளை விரைந்து முடித்து, முடிவுகளை அரசுக்கு அறிக்கையாக,15 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.