மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே?

0
234
K. S. Alagiri

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே?

சென்னை

அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், கேஎஸ் அழகிரி மீதான அதிருப்திகள் மேலிடத்துக்கு பறந்தபடியே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோஷ்டி பூசல்

எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் இருப்பது இயல்பு என்றாலும், கட்டிப்புரண்டு மண்ணில் உருண்டு புரளக்கூடிய அளவுக்கு இருப்பது காங்கிரஸ் கட்சிதான். இந்திரா முதல் சோனியா வரை யாராலுமே இதுவரை அக்கட்சியின் பஞ்சாயத்துக்களை தீர்க்க முடிந்ததில்லை.

இப்போதும் அதுமாதிரி ஒரு பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அந்தந்த மாநில தலைவர் பதவிகளை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

கே.எஸ். அழகிரி பதவிக்காலம்

அதற்கேற்றவாறு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரியின் பதவிக்காலமும் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

Ruby R Manoharan
Ruby R Manoharan

இப்படிப்பட்ட சூழலில்தான், கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், கட்சியின் பொருளாளர் ரூபி ஆர் மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே உருட்டுக்கட்டை மோதல் நடந்து, சத்தியமூர்த்திபவனே ரத்தக்களறியாகிவிட்டது.

கே.எஸ். அழகிரிக்கு எதிரான நிலைப்பாடு

இந்த வன்முறைக்கு காரணமே அழகிரிதான் என்றும் ஒரு தரப்பு குற்றஞ்சாட்டவும், மூத்த தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஸ், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, உட்பட பல நிர்வாகிகள் கடுப்பானார்கள். அத்துடன், அழகிரிக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுக்க துவங்கினர். இதற்காக அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, அழகிரி மீதான புகார்களை அடுக்கினார்கள்.

அவை அனைத்தையும் கார்கே அமைதியாக கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதற்கு பிறகு, வேறு சில நிர்வாகிகளும் அழகிரியின் செயல்பாடுகளை பற்றி கார்கேவிடம் எடுத்து சொல்லி உள்ளனர். குறிப்பாக, கட்சியை சாதி சங்கமாக நடத்துவதாக முக்கிய புகார் எடுத்துரைக்கக்கப்பட்டதாக தெரிகிறது. அவைகளையும் கார்கே பொறுமையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Mallikarjun Kharge

அதுமட்டுமல்ல, தினேஷ்குண்டுராவ், கார்கேவுக்கு அளித்த ரிப்போர்ட்டிலும், அழகிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளையே சொல்லி உள்ளதாக தெரிகிறது. இப்படி அனைத்து பக்கமிருந்து வந்த புகார்களை கார்கே பெற்றுக் கொண்டாலும், அதுகுறித்து எதுவுமே முடிவு சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

கே.எஸ். அழகிரிக்கு ஆதரவு

இதற்கு நடுவில் வேறு சில அதிரடிகளும் அடுத்தடுத்து கட்சிக்குள் நடந்தன. 11 எம்எல்ஏக்கள் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றக்கூடாது என்று வற்புறுத்தல்கள் நடந்தன. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையை தினேஷ் குண்டுராவ் ரத்து செய்தார்.

இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், தினேஷ் குண்டுராவுக்கும் இடையே உரசல் வரும் அளவுக்கு விவகாரம் சென்றது. பின்னர் தினேஷ் குண்டுராவையும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியையும் டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விளக்கமும் கேட்டது.

அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும், எதிர்ப்பின் காரணத்தாலும் அவர் பதவி மாற்றப்படலாம் என்ற தகவல்களும் இணையத்தில் வட்டமடிக்க துவங்கின. ஆனால், காங்கிரஸ் மேலிடம் எந்த கருத்தையும் சொல்லவேயில்லை.

அழகிரியின் 3 வருட செயல்பாடுகள்

அழகிரியின் இந்த 3 வருட செயல்பாடுகள், இப்போது மாநிலம் முழுவதும் 23,400 கொடியேற்றும் திட்டம் ஆகியவற்றையும் டெல்லி மேலிடம் யோசித்து பார்ப்பதாக தெரிகிறது. அதனால், எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவெடுக்காமல் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அழைத்து கார்கே ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

ப. சிதம்பரம் ஆலோசனை

கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி சிதம்பரத்திடம் கார்கே கருத்து கேட்டாராம். அதற்கு ப. சிதம்பரம், “துடிப்பாக கட்சிக்கு வேலை செய்பவர்களை பார்த்து நியமியுங்கள்” என்று மட்டும் சொன்னதாக கூறப்படுகிறது.

P. Chidambaram

ஆக, பிரச்சனைகளும், நெருக்கடிகளும், சலசலப்புகளும் தமிழக காங்கிரஸை நாளுக்கு நாள் சூழ்ந்து வருவதால், அழகிரி மாற்றம் என்பது நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். இப்படித்தான், ஆந்திரா, பீகார் மாநிலங்களில் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கிவிடவும், உடனடியாக அங்கு மாநில தலைமையை மாற்றினார்கள்.

மாற்றம் நிச்சயம்

அதுபோலவே, தமிழக காங்கிரஸிலும் மாற்றம் நிச்சயம் நடக்கும் என்றும், ஆனால், ராகுல் நடைபயணம் நடந்து வருவதால் அநேகமாக பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் இந்த மாற்றம் இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். ஆனால், அழகிரி தரப்போ, வழக்கம்போல் அசராமல் உள்ளது. என்னது, தலைமை பதவி மாற்றமா? நோ சான்ஸ் என்று கெத்தாக சொல்லி வருகிறதாம்.