அரசு அனுமதி பெற்ற மண் குவாரியில் களிமண்ணிற்கு பதிலாக மணல் கடத்தப்படுவதாக புகார்

0
246
Complaint that sand is being smuggled instead of clay in a government sanctioned mud quarry

அரசு அனுமதி பெற்ற மண் குவாரியில் களிமண்ணிற்கு பதிலாக மணல் கடத்தப்படுவதாக புகார்

அரசு அனுமதி பெற்ற மண் குவாரியில் களிமண்ணிற்கு பதிலாக மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கொத்தவாசல் என்கிற கிராமத்தில் குணசேகரன் என்பவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் களிமண் எடுப்பதற்கான மண்குவாரியை அரசு அனுமதியுடன் நடத்தி வருகின்றனர்.

இதில் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் பத்து வாகனங்களில் மட்டுமே மண் அள்ளப்பட வேண்டும் என அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மண் எடுக்கப்படுதாகவும்,கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதுடன் அருகிலுள்ள திருமலைராஜன் ஆற்றில் நீர்வரத்து இருக்கும்போது வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது.

மேலும் மண் அள்ளிச் செல்ல பயன்படுத்தும் வாகனங்களின் உரிமம் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். எத்தனை வாகனங்களில் மண் அள்ளலாம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை புகாரில் முன் வைத்துள்ளனர்.

இது குறித்து மண் குவாரி நிர்வாகத்தில் விசாரித்த போது அரசு அனுமதி பெற்று தான் இந்த குவாரி நடக்கிறது. விதிமுறைகளில் கூறியுள்ள படி அனுமதிக்கப்பட்ட அளவு தான் தினசரி மண் எடுக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் கேட்டபோது திருவாரூர் கோட்டாட்சியர் தலைமையில் இது தொடர்பாக மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.