சைபர் கிரைம் மோசடி கும்பலால் தற்பொழுது பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது அரசு இணையதள சேவையை போன்று போலியான இணைய தள சேவையை உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர் என்ற தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.
குறிப்பாக அதில், உங்கள் கணினி (கம்ப்யூட்டர்) முடக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பதுபோல் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். மேலும், இதை அழுத்தவும் என ஆப்ஷன் வரும். நீங்கள் அதை அழுத்திய உடன், நீங்கள் சில ஆபாச இணையதளங்களை பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது என்ற செய்தியோடு, இதனால் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
ரூ.30,290 அபராதத் தொகை செலுத்தினால் தண்டனையிலிருந்து விடுபடலாம். மேலும், உங்கள் கணினி மீண்டும் செயல்படும் என அரசு எச்சரித்தது போல் தகவல் வரும். இந்த அபராதத் தொகையை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் மோசடி கும்பல் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், அக்கும்பல் கேட்கும் தகவல்களை உள்ளீடு செய்தால் சம்பந்தப்பட்டவரின் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டு, பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மோசடி இணையதளத்துக்கு சீனா சேவை வழங்கி உள்ளதை கண்டறிந்துள்ளோம்.தற்போது இந்த சட்ட விரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.