10.5 சதவீத உள்ஒதுக்கீடு! ஜிகே மணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
177

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு இணையதளம் மூலமாக பாராட்டு விழா நடத்துவதற்கு தீர்மானம் செய்து இருக்கின்றார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை ஒன்றில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு தற்சமயம் வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

வன்னியர் சமூக மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மலர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு முதல் காரணமாக இருந்த டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வாங்கிக்கொடுத்த மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்கள்.

இருந்தாலும் நோய்த்தொற்று ஊரடங்கு உள்ளிட்டவை இருக்கும் சூழ்நிலையில், இது போன்ற விழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதன் காரணமாக, பாட்டாளி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் விதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் சமூக முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு இணையதளம் மூலமாக பாராட்டு விழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து எதிர்வரும் 31ஆம் தேதி மாலை 5 மணி அளவில் என்னுடைய தலைமையில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவிற்கு வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சிவபிரகாசம், உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மற்ற மூத்த தலைவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். மருத்துவர் ராமதாஸ் ஏற்புரை ஆற்ற இருக்கிறார். இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகளை சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைய வழியில் பங்கேற்பார்கள் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார்.