சட்டப்படி 7 பேரையும் அரசு விடுதலை செய்யலாம்! காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பேச்சு!!
முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட ஏழு பேரையும் அரசு விடுவிக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி சட்டசபையில் கூறியுள்ளார். பட்ஜெட் குறித்த விவாத நேரத்தில் பேசிய விஜயதாரணி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகாலமாக சிறையில் கொடுமை அனுபவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட மன்னித்துவிட்டார்கள். இதன் பிறகு சட்டப்படி அவர்களை விடுதலை செய்யும் நிலைக்கு அனைவரும் ஆதரவு தருகிறார்கள். உடனடியாக அரசு தன் கடமையை செய்ய வேண்டும் என்று கூறினார். ஏழ்வரையும் விடுதலை செய்யுமாறு பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், ராஜீவ்காந்தி இறந்த சம்பவத்தின் போது 18 பேர் உயிரிழந்தார்கள், இதுவரை அவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த சம்பவத்தில் தனது தாயும் காயப்பட்டதை குறிப்பிட்டு பேசினார்.
சிறைக் கொடுமையில் இருந்த முருகன் தன்னை கருணை கொலை செய்யுமாறு மனுக்களையும் சிறைத்துறையினரிடம் அளித்துள்ளார். கடந்த மாதங்களில் பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோர் பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.