Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி? கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்! சிக்கலில் மேலிடம் 

ADMK with Congress

ADMK with Congress

ஒன்றிணைந்த அதிமுக உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும், அதிமுக தற்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்தால் அதை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என ஒவ்வொரு கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றன. அதற்கேற்றார் அதிமுகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புண்டு, அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என வித விதமான தகவல்கள் வெளியாகிய வண்ணமேயுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ள கட்சிகளின் பட்டியலில் சிலர் காங்கிரஸ் கட்சியையும் சேர்க்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக கிரிஸ் ஜோடங்கரை அக்கட்சி மேலிடம் நியமித்தது. அதன் அடிப்படையில் அவர் கடந்த 3 ஆம் தேதி தமிழக பொறுப்பாளர்களை சந்திக்க சென்னை வந்திருந்தார்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிரிஸ் ஜோடங்கரும் ப.சிதம்பரமும் நண்பர்கள் என்றும், சென்னை வந்தால் இருவரும் சந்திப்பதாகவும் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் கிரிஸ் ஜோடங்கரை ப.சிதம்பரம் முதலில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது திமுக கூட்டணியை பற்றியும் அதனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள சாதகம் பற்றியும் நிறைய அவருடன் பகிர்ந்துள்ளார்.மேலும் இதே கூட்டணி வரவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்ததாக பீட்டர் அல்போன்ஸ் அவரை சந்தித்துள்ளார். அவரும் தமிழக அரசியல் மற்றும் கூட்டணி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். மறுநாள் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு அவர் சென்று கட்சியினரை சந்தித்துள்ளார். அங்கு திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.க்கள் ஜெயக்குமார் மற்றும் விஸ்வநாதன் உள்ளிட்ட பல மாநில நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்களில் முதன்மையானதாக பலரும் தற்போதைய தலைவரான செல்வப்பெருந்தகையை மாற்றுங்கள் என அவரிடம் முறையிட்டுள்ளனர். அடுத்ததாக பெரும்பாலோனோர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், ஒரு சில சீனியர்கள் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்பது கட்சிக்கு அதிகாரம் வேண்டும் அது அதிமுக கூட்டணிக்கு சென்றால் கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை திமுகவுடன் நல்ல நெருக்கத்தில் உள்ளதால் அதெல்லாம் வாய்ப்பில்லை என அங்கேயே மறுப்பு தெரிவித்து விட்டார் என்று கூறப்படுகிறது.

சில தினங்களாக நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Exit mobile version