Train Accident: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து காரணமாக கவனகுறைவாக ரயிலை இயக்குவது, அலட்சியமான பணி, கவனக்குறைவாக இருந்து காயத்தை ஏற்படுத்துதல், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் கடந்த மாதம் 11ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாகுமதி ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் எக்ஸ்பிரஸ் ரயில் லூப் வழியில் சென்றதே என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் இல்லாமல் 19 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது தண்டவாளத்தில் நட்டு மற்றும் போல்டு காணாமல் போனது குறித்து ஆய்வு நடத்தினர். அதில் விபத்து குறித்து தெற்கு ரயில்வேயில் உள்ள 13 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் கவனக்குறைவாக ரயிலை இயக்கி மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் (பிரிவு 281), கவனக்குறைவாக இருந்து காயத்தை ஏற்படுத்துதல் (125 ‘ஏ’) மற்றும் அலட்சியமான பணி (125 ‘பி’), ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தை விளைவித்தல் (154) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசாரணை முடிந்துவிட்டது.
விரைவில் இந்த ரயில் விபத்து சதி காரணமாக நடந்ததா இல்லை சிக்னல் கோளாறு காரணமாக நடந்ததா அல்லது லோகோ பைலட்டின் அலட்சியம் காரணமாக நடந்ததா என்பது தெரியவரும் என போலீசார் அறிவித்துள்ளனர்.