Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை

Construction Material Price Hike Issue

Construction Material Price Hike Issue

கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு! பணிகள் முடங்கும் அபாயம் – அரசு தலையிட கோரிக்கை

கட்டிடம் கட்ட உதவும் கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விலையை முறைப்படுத்த கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கட்டுமான பொறியாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

கட்டுமான பொருட்களான எம்சாண்ட், சிமெண்ட் மற்றும் இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, எம்சாண்ட் விலையானது ரூ.12,500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.15,200 ஆக உயர்ந்துள்ளது, அதேபோல பி.சாண்ட் விலை ரூ.15,500 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.17,200 ஆகவும், சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.380 ஆக இருந்த நிலையில் தற்போது 470 ஆகவும், ஸ்டீல் டன் ஒன்றுக்கு ரூ.55 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது ரூ.69 ஆயிரம் ஆகவும், செங்கல் 1 லோடு விலை ரூ.29,250 லிருந்து ரூ.42,750 ஆகவும், எலக்ட்ரிக்கல் கேபில் 180 மீட்டர் ரூ.4397ல் இருந்து ரூ.6387 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில்,  தற்போது மேலும் சிமென்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை விலையை உயர்த்த போவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதேபோன்று மற்ற கட்டுமான பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வாறு கட்டுக்கடங்காமல் உயரும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தமிழகத்தில் பல இடங்களில் வீடு கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க தலைவர்  எம்.சரவணன் கூறியதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட் ஒரு மூட்டைரூ.60 வரையும், ஸ்டீல் விலைரூ.12 ஆயிரம் வரையும் உயர்த்தியுள்ளனர். இதனால் கட்டுமானத்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version