புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!

0
149

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவர் காய்ச்சலால் பலியானதால்  கணவரின் உடலை மீட்டுக் கொடுக்குமாறு புதுக்கோட்டையை சேர்ந்த பெண் போராடி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதியைச் சார்ந்த ஆவுடையார் கோவில் அருகில் உள்ள மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 36. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக  சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு உறவினர்களிடம் கடன் வாங்கி போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு நாடான புருனேக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஜாபர் அலி என்பவரின் கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றார்.

இந்நிலையில் அங்கு வேலை செய்து வந்த சுரேஷிற்கு சில மாதங்களிலேயே காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் 16.09.2022 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து காய்ச்சல் குணமாகாத நிலையில் கோமாவிற்கு சென்று விட்டதாக தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சுரேஷின் உடல்நிலை குறித்து அவரின் முதலாளி ஜாபர் அலி அவ்வப்போது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி உள்ளார்.

சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் சுரேஷின் மனைவி ராஜலட்சுமி தனது கணவரை  இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளார். ஆனால் சிகிச்சையில் இருப்பவர் இந்தியாவிற்கு அழைத்து வர முடியாத சூழ்நிலையில் உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் சுரேஷ் இறந்துவிட்டார் என அவரின் மனைவி ராஜலெட்சுமிக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து கணவர் தங்களை விட்டு பிரிந்த துயர செய்தி கேட்டு கதறி அழுத ராஜலட்சுமி கணவரை உயிருடன் தான் கூட்டி வர முடியவில்லை அவரது உடலையாவது எனக்கு மீட்டு தாருங்கள் எனக் கூறி மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ராஜலட்சுமி கோரிக்கை மனுவை சென்னையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆணையர் அலுவலகத்திற்கும், பொதுத்துறை செயலாளருக்கும் அனுப்பி வைத்தார். 10 நாட்கள் ஆகியும் சுரேஷின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. மேலும் சுரேஷின் முதலாளியும் அவரின் உடலை வாங்கி அனுப்பவில்லை. இதனால் சுரேஷின் குடும்பத்தினரும், கிராமமும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இது பற்றி சுரேஷின் உறவினர் கூறும் பொழுது, சிகிச்சையின் போது செலவுகளை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய சுரேஷின் முதலாளி இறந்தவுடன் உடலை வாங்கி அனுப்புவதாக கூறினார். ஆனால் தற்போது சிகிச்சைக்கான பணம் 24 லட்சம் கட்டினால் தான் உடலை பெற முடியும். என்னிடம் தற்போது அவ்வளவு பணம் இல்லை. பணம் கிடைத்ததும் கட்டி உடலை வாங்கி அனுப்புகிறேன் இல்லையெனில் உறவினர்கள் பணம் கட்டினால் உடலை வாங்கி அனுப்புவதாக  கூறியுள்ளார். பத்து நாட்கள் ஆகியும் சுரேஷின் உடலை காணாத துக்கத்தில் அவரின் மனைவி குழந்தைகள் உணவின்றி தவித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஒரு ஏழைப் பெண்ணின் துயரைத் துடைக்க கோரிக்கையை ஏற்று சடலத்தை மீட்டு தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.