தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இக்காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவி வருவதால், வானிலை ஆய்வு மையம் – விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தாக்கமாக, மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் காற்றழுத்தம் மழையின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், டெல்டா மாவட்டங்களில் அதிக மழை காரணமாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் போன்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை நிறுத்தம் செய்தி பரபரப்பு
கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படலாம் என சமூக வலைதளங்களில் வேகமாக செய்திகள் பரவின. குறிப்பாக, “மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படும்” என்று ஒரு செய்தி பரவியது.
இந்த செய்தி பலரை பதட்டத்திற்குள்ளாக்கியது. மக்கள் இடம்பெயர வாய்ப்புகள் குறைந்து விடுமா என்ற சந்தேகத்தில் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்
இந்த விவகாரத்தை தெளிவுபடுத்த, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. அதில், “கனமழை காரணமாக பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்படும்” என்ற செய்தி முற்றிலும் தவறானது எனவும், 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பழைய செய்தியை தேதியை மறைத்து பரப்பியதன் விளைவாக இது உருவாகியுள்ளது எனவும் அறிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து துறை இதுவரை எந்த விதமான சேவை நிறுத்த அறிவிப்பும் வெளியிடவில்லை. டெல்டா மாவட்டங்களில் பேருந்து சேவைகள் வழக்கம்போல இயங்கும் என்றும் பொதுமக்கள் இந்த போலிசெய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.