தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பின்னர் சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்களும் ஆர்வத்துடன் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள், ஆனாலும் பல பகுதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.
முன்னரே கன்னியாகுமரியில் நரிக்குறவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் மீன் வியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவரை வெவ்வேறு தினங்களில் அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அதன் பிறகு இதுகுறித்து போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டது.
தற்சமயம் அதே போன்று மற்றொரு சம்பவம் நடந்திருப்பதால் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கோரிமேடு கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் இன்று காலை மீன் வியாபாரத்திற்காக மீனை ஏலம் எடுத்து அதனை மீன் கூடையில் வைத்து மகாபலிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அங்கு வந்த தாம்பரம் மார்க்கமாக செல்லும் பேருந்தில் ஏறி இருக்கிறார், அப்பொழுது அந்த பேருந்தின் நடத்துனர் மீன் கூடையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று தெரிவித்து அந்த பெண்மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது, அதோடு அவரை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டிருக்கிறார்.
இதன் காரணமாக, அந்த பெண் மனவேதனை அடைந்திருக்கிறார், அதோடு இந்த பேருந்தில் இந்த நடத்துனர் பணியில் மட்டுமே பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், அவதூறாக பேசுவதாகவும், அந்தப் பெண் குற்றம் சுமத்துகிறார் நடத்துநர் மீது போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.