Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அலைபேசி மூலம் கொரோனா பரவும் ஆபத்து – எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்

AIMS என அழைக்கப்படும், அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் மருத்துவமனை இந்திய அளவில் புகழ்பெற்ற மருத்துவமனையாகும். இதன் ராய்பூர் மருத்துவமனையிலுள்ள ஐந்து மருத்துவர்கள், BMJ Global Health Journal எனும் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அலைபேசி மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்பிருப்பதை குறித்து குறிப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது :

அலைபேசியின் மேற்பரப்பு, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பு கொண்டது. அலைபேசி பேசும்போது, நமது முகம், காது, கண், வாய் ஆகியவற்றை ஒட்டியே வைத்திருப்போம். எனவே, எளிதாக வைரஸ் பரவும். என்னதான் கைகளை முறையாக கழுவினாலும், அலைபேசி கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்.

ஒரு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட ஆய்வில், 15 நிமிடத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை சுகாதார பணியாளர்கள் அலைபேசி பயன்படுத்துவது தெரிய வந்தது. ஏறத்தாழ 100 சதவீதம் பேரும் அலைபேசி பயன்படுத்தினாலும், 10 சதவீதம் பேர் மட்டுமே அவ்வப்போது அலைபேசியை துடைக்கின்றனர்.

சுகாதார பணியாளர்களுக்கு முக கவசம், தொப்பி ஆகியவை போல், அலைபேசியும் உடலுடன் ஒட்டியே இருக்கிறது. ஆனால், முக கவசம், தொப்பி ஆகியவற்றை துவைப்பதுபோல், அலைபேசிகளை துவைக்க முடியாது. கையின் நீட்சியாக அலைபேசி இருப்பதால், அலைபேசியில் இருக்கும் எல்லாமே கைக்கு மாறும்.

மேலும், அலைபேசிகள், பாக்டீரியாக்கள் குடியிருக்க வாய்ப்புள்ளவை. கை சுத்தத்தாலும் அதை தடுக்க முடியாது. எனவே, மருத்துவமனைகளில், தகவல் பரிமாற்றத்துக்கு அலைபேசிகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, ஹெட்போன்கள், இன்டர்காம் தொலைப்பேசி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மேலும், அலைபேசிகளை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வதன்மூலம், கிருமி பரவும் என்பதால், வெளியிடங்களிலும் அதை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். அலைபேசிகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

இதுதொடர்பாக, அரசு அமைப்புகளும், உலக சுகாதார நிறுவனமும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Exit mobile version