Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவர்களுக்கும் இது நிச்சயமாக செய்யப்படும்! சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி பேட்டி!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில் 75 படுக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த படுக்கைகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள். அப்போது மருத்துவமனையின் தலைமை பொறுப்பாளர் ஜெயந்தி உடன் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, உள்ளிட்ட நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் எல்லோரும் கட்டாயமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

இதுவரையில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருந்தாலும், வருமுன் காப்போம் என்பதை பின்பற்றும் விதமாக சென்னையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், சந்தைப் பகுதிகள், உள்ளிட்ட இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் இன்று முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பிறகு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியிடம் இருந்து பலருக்கு நோய் பரவியது. இதுவரையில் 4 ஆயிரத்து 395 பேருக்கு பரிசோதனை செய்ததில் 175 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இதில் 93 பெயருக்கு எஸ் ஜீன் குறைபாடு கண்டறியப்பட்டிருக்கிறது, பொது மக்கள் எல்லோரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் என்று எங்கு சாப்பிட்டாலும் சமூக இடைவெளி அவசியம் என்று கூறியிருக்கிறார்.

ஒரு மரபணு பரிசோதனைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது, தற்சமயம் பரவி வருவது என்னவிதமான வகை தொற்று என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான சிகிச்சை தான் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே வருங்காலங்களில் மரபணு பகுப்பாய்வு செய்ய வேண்டியதாக இருக்காது என்று கூறியிருக்கிறார்.

இதன்பிறகு சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, சென்னையில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருவரிடமிருந்து நூறு பேர் வரையில் நோய்கள் பரவுவதால் அறிகுறி இருப்பவர்கள் எல்லோரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதோடு நோய்த்தொற்று பாதித்தவர்கள் உறவினர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதனை தவிர்த்து மருத்துவமனைகள், நோய்த்தொற்று பரவல் அதிகமாக பரவும் இடமாக இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு கட்டாயமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஆகவே இதற்க்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, தேவையில்லாமல் பயணங்களை மேற்கொள்ள கூடாது, அனைவரும் முக கவசத்தை மூக்கு வரையில் அணிந்து கொள்ள வேண்டும், சென்னையில் தடுப்பூசி போடாமல் இருக்கின்ற 5 லட்சம் நபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version