கொரோனாவிற்கு இந்தியாவில் முதல் பலி! ரத்த பரிசோதனையில் உறுதி: இந்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தகாக கூறப்பட்டது. ஆனால் முறையான பரிசோதனை எதுவும் நடத்தபடாமல் இருந்ததால் அதனை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணம் என்பதை தெரிவிக்க மறுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் மரணம் அடைந்த கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர், கொரோனா வைரஸ் தாக்குதலால் தான் பலியானார் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இவருடைய மரணம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நடந்த முதல் பலி என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவில் அதன் பாதிப்பு இல்லை என்ற ஆறுதலில் இருந்தாலும் தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது என்ற தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலபுர்கியைச் சேர்ந்த 76 வயதாகும் முதியவர் சமீபத்தில் சவுதி அரேபியாவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்தியா வந்த அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திடீரென்று அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் அவருடைய ரத்த பரிசோதனை ஆய்வறிக்கை வெளியாகாததால், அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தான் உயிர் இழந்தாரா? என்பது உறுதியாகாமல் இருந்தது.
இந்நிலையில், இறந்த அந்த முதியவரின் ரத்த பரிசோதனை அறிக்கை கர்நாடக மாநிலத்தின் சுகாதார துறைக்கு நேற்று கிடைத்தது. அதில், இறந்த அந்த முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதன் மூலமாகவே மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதிபடுத்தும் இந்த தகவலை அந்த மாநில சுகாதார துறை மந்திரி பி.ஸ்ரீராமுலு தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு இந்தியாவில் ஏற்பட்ட முதல் பலி உறுதியானதையடுத்து இந்திய அரசு அதிரடி கட்டுபாடுகளை விதித்துள்ளது.
சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங், வியட்நாம், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லி விமான நிலைய பகுதியில் உள்ள வரி விலக்கு பெற்ற ‘ஷாப்பிங்’ பகுதிக்குள் செல்ல இந்திய அரசு தடை விதித்துள்ளது.
அடுத்ததாக மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளுக்கு சென்று திரும்பிய இந்தியர்களும் அந்த பகுதிகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.