சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் தற்போது நோய்த்தொற்று பரவல் வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும் திடீரென்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட சிலருக்கு நோய் தொற்று அறிகுறிகள் உண்டானது.
இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 40 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் தான் 6 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று எல்லோருக்கும் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவல் கண்டறியப்படும் எல்லோருக்கும் சிகிச்சை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் கண்டறியப்பட்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார் என தெரிகிறது.
முன்னதாக சென்னை ஐஐடி மற்றும் சத்தியசாய் தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எல்லோருக்கும் நோய் பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.