கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு! இனி குறைந்த விலையில் மருத்துவ பரிசோனை?
இந்திய அளவில் மக்களை வீட்டிற்குள் முடக்கிப் போடும் கொரோனா வைரஸை எளிதில் பரிசோதனை செய்யும் வகையில், புனேவைச் சேர்ந்த “மைலேப் டிஸ்கவரி சொல்யுசன்” என்ற இந்திய நிறுவனம் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அங்கீகாரம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, தேனி, நெல்லை போன்ற பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரிசோதனை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கி இருந்தது.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மற்றும் சென்னையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வகத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு நடத்தும் பரிசோதனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் தனியார் ஆய்வகங்களில் நடத்தப்படும் பரிசோதனைக்கு ரூ.4500 கட்டணம் வசூலிக்குமாறு அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், புனே பகுதியைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யுசன் என்ற இந்திய நிறுவனம் கொரோனா பரிசோதனை கருவியை முதல்முறையாக கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.80,000 என்று கூறப்படுகிறது. இந்த ஒரு கருவியின் மூலம் 100 பேருக்கு பரிசோதனை செய்யலாம் என்று கூறியுள்ளனர். இந்த கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று அனுமதி அளித்ததோடு, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு கழகமும் தனது அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த அனுமதியின் மூலம் அந்த நிறுவனம் கருவிகளை விற்க முடியும். அடுத்த வாரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான புதிய கருவிகளை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு கருவிகளின் விற்பனை விலையில் கால்வாசி பங்கு மட்டுமே இந்த கொரோனா பரிசோதனை கருவி விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனைக்காக 4500 ரூபாய்க்கு நடத்தும் கொரோனா பரிசோதனை இந்த கருவியின் மூலம் ரூ.1200 விலையில் பரிசோதனை நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.