தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 1,437 பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 69 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர், 902 பேர் குணமடைந்துள்ளனர்.நேற்று மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிக, ஐடி நிறுவனங்களை கடந்து தற்போது கொரோனா தொற்றின் பரவல் தேர்தல் களத்திலும் எதிர்விளைவுகளை உண்டாக்கி வருகிறது. இந்நிலையில் சேலத்தில் வன்னியர் சங்கத்தின் முக்கிய தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் நகர வன்னியர் சங்க தலைவராக செயல்பட்டு வந்தவர் ராமகிருஷ்ணன். 70 வயதான இருவருக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் தென்பட்டதை அடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த பெரும் துயரில் இருந்து வன்னிய சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் மீள்வதற்குள் பேரதிர்ச்சியாக அவருடைய மகன் மற்றும் மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து ராமகிருஷ்ணனின் மனைவி சாமுண்டிஸ்வரி, மகன் ராஜேஷ்குமார் தனிமைப்படுத்தப்பட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணன் உடன் தொடர்பில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் சேலம் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.