புதுவையில் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 9.16 கோடி பெறப்பட்டுள்ளது. இதிலிருந்து ரூபாய் 12 லட்சத்திற்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் ரூபாய் 10 லட்சத்திற்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க காசோலை அளிக்கப்பட்டது.
உயிரிழப்பு விகிதம் தேசிய அளவில் 2.5 சதவீதமாக உள்ள நிலையில், புதுவையில் 1.4 சதவீதமாக உள்ளது. இதுவரை புதுவையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.புதுவை சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதத்தின் போது பேசிய அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
“கொரோனாவிற்கு எதிரான போரில் துணைநிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், வருவாய், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள். கடைநிலை ஊழியர்கள், அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து நோயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்
ஆறுமாதங்களுக்கு இலவச அரிசி வழங்கியதை தவிர மத்திய அரசிடம் இருந்து புதுவைக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியுடன், இதுவரை நடந்த 5 காணொளிக்காட்சி சந்திப்புகளில் மூன்று முறை பேச வாய்ப்பு கிடைத்தபோது, புதுவைக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி கேட்டும், இதுவரை அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும். மேலும் கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூபாய் 700 மதிப்பிலான அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.