டெல்லி: ஆங்கில ஆசிரியர் ஒருவர் பணி இழந்து காய்கறி விற்கும் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் பெருமளவில் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் தொற்று அதிகரிப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சர்வோதயா பால் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் ஒப்பந்த ஆங்கில ஆசிரியராக வசிர் சிங் என்பவர் பணியாற்றினார். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் வருமானம் இல்லாமல் தள்ளுவண்டியில் காய்கறி விற்று வருகிறார். கடந்த மே மாதம் 8 ஆம் தேதியில் இருந்து சம்பளம் வரவில்லை என்பதால் வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் காய்கறி விற்பதாக கூறினார்.