இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி அதிகரிக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த அதிகமான தொற்று பகுதிகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தென்மாநில பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் பெற்ற தாயை கொரோனா பாதித்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். அங்கிருந்த சிலர் அவரிடம் விசாரித்தபோது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றுவந்த போது கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.
அதற்கு பிறகு என் மகன் இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுவிட்டான். சம்பவத்தை அறிந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதோடு, அவர் இருந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் வயதானவர்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.