சென்னையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா உறுதி! இறுதிச்சடங்கில் 300 பேர் பங்கேற்றதால் பரபரப்பு.!!
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த பிறகு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துபாயில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை வந்தார். அங்குள்ள தனது மூத்த மகனுடன் வீட்டில் தங்கியுள்ளார். இவரது குடும்பம் கீழக்கரையில் வசித்து வருகின்றனர். துபாயில் இருந்து திரும்பிய முதியவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள மெடிக்கல் கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இதன் பின்னரும் காய்ச்சல் தொடரவே சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வெளிநாட்டு பயணி என்பதால் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் தனியார் மருத்துவ டாக்டர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து 3 நாட்கள் கழித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு முதியவர் சென்று தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். இதனிடையே அவரது ரத்தமாதிரியை எடுத்த மருத்துவர்கள் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையின் அனுமதியுடன் முதியவரின் உடலை கீழக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது குடும்பத்தினர் உறவினர் உட்பட 300 க்கும் மேற்பட்ட நபர்கள் சூழ இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஒருவரும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை முதியவரின் ரத்தமாதிரி பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், முதியவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அவரது உட்பட 300 பேருக்கும் கொரோனோ பரவியிருக்கலாம் என்கிற அடிப்படையில் உடனடி பரிசோதனை செய்ய ராமநாதபுர மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சாதாரண மரணம் என்று நம்பி கொரோனா பாதித்தவரின் உடலை அடக்கம் செய்ய பலர் கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.