தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.?

0
185

தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்ட நிலையில் இருந்து வருகிறது. மேலும் இது 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்ட நபர்களை சோதனை செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் 12 பரிசோதனை ஆய்வகங்களும் தனியார் சார்பில் 7 பரிசோதனை ஆய்வகங்கள் உட்பட மொத்தம் 19 ஆய்வகங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த பரிசோதனை ஆய்வகங்களின் மூலம் இதுவரை 6,095 பேருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 738 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட 344 பேருக்கான மாதிரி முடிவுகள் வரவேண்டும். இதுவரை 21 பேர் இந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதுகாப்பு பொருட்களான N95 முகக்கவசம், பாதுகாப்பு உடைகள், ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் மற்றும் சானிடைசர்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. மேலும் 2,500 வென்ட்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 4 லட்சம் ரேபிட் கிட்ஸ்களை வாங்குவதற்காப ஆர்டர் செய்து இருக்கிறோம். இன்று 50 ஆயிரம் கிட்ஸ்கள் வந்துவிடும். ஏற்கனவே தமிழகத்தில் 3,371 வென்ட்டிலேட்டர்கள் மற்றும் 32,371 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சென்றவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி வரை மட்டுமே 2 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் அத்தியாவசிய தேவைகளுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று வேளாண்மை மற்றும் உள்ளாட்சித்துறையின் மூலமாக 3,500 வாகனங்கள் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன. 111 குளிர்பதன கிடங்குகள் வைக்கப்பட்டுள்ளன, இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மக்களுக்கு தேவையான கிடைக்காத அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அண்டை மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். மேலும் 1.94 கோடி குடும்ப அட்டைகளுக்கான நிவாரண நிதி ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்ததோடு, முதியோர் உதவித்தொகை வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது. அங்கன்வாடியில் உள்ள 24 லட்சம் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் கட்ட நிலையில்தான் உள்ளது மேலும் அது 3 ஆம் கட்ட நிலைக்குச் செல்ல வாய்ப்புண்டு. நோயின் தீவிரத்தை அனுசரித்தே ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முடிவு எடுக்கப்படும். நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலைமையை ஆய்வு செய்ய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.