உலகளவில் 1 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா! ஊரடங்கு வாழ்க்கை நீடிக்குமா.?
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து கடந்துள்ளது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா என்னும் தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவியதோடு பலாயிரம் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் உச்சகட்ட பாதிப்பை சந்தித்து வருகின்றன.
அமெரிக்காவில் 4.75 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அங்கு 17,820 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 1.57 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,969 பேர் இறந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 1.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உலகில் அதிகபட்ச உயிரிழப்பாக 18,279 பேர் இதுவரை இறந்துள்ளனர். ஜெர்மனியில் 1.19 லட்சம் பேர் பாதிப்பான நிலையில் அங்கு 2,567 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
மேலும் இங்கிலாந்து மற்றும் பிரான்சு போன்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தொடர்ந்த அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்களின் குழு தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு இன்னும் வெளியாகவில்லை.
மலேசியாவில் கொரோனா பாதிப்ப தடுக்க ஏப்ரல் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு அமலில் உள்ளது. இதேபோல் ஒடிசாவிலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பை அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் நேற்று முன்பு அறிவித்தார். விரைவில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.