மக்களுக்காக களத்தில் இறங்கிய சச்சின்! 5 ஆயிரம் பேருக்கு ஒருமாத அத்தியாவசிய நிவாரண உதவி!
கொரோனோ பாதிப்பால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத மக்களுக்கு உதவும் வகையில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாத உணவுப் பொருட்களை வழங்குவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் வீட்டில் முடங்கிய மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கஷ்டபடுகின்றனர். அந்தந்த மாநில அரசுகளும் முடிந்தவரை மருத்துவம், பாதுகாப்பு, விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை, ஊரடங்கு கண்காணிப்பு, உணவுப் பொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதியையும் தனியார் நிறுவனங்கள் மற்றும் சினிமா, விளையாட்டு பிரபலங்கள் அளித்து வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனா பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு உதவிபுரயி முன்வந்துள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி நகர் மற்றும் கோவந்தி பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏழை மக்களுக்கு ஒருமாத கால அத்தியாவசிய உணவுப் பொருட்களை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்க சச்சின் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் அப்பகுதி மக்களின் அடிப்படை சிக்கல் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.