கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்!
-புதுவை அரசு அதிரடி உத்தரவு
புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிக்கலை நாட்களை சமாளிக்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அரிசி, எண்ணெய், பருப்பு, நிவாரண தொகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை தேவைகளுக்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை அரசு கட்டுமான பணியாளர்களுக்கு ஆறுதலான நிவாரண அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியதாவது; புதுச்சேரி கட்டுமான பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்குவதாக கூறியுள்ளார். இதற்கு முன்னர் அடிப்படை பொருளாதார தேவைக்காக ரேசன் அட்டைகளுக்காக ரூ.2,000 வழங்கப்பட்டது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.