திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
சென்னை திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ -வாக திமுக கட்சியின் ஜெ.அன்பழகன் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல் நாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெ.அன்பழகனின் குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற ரீதியில் முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோனை செய்யப்பட்டது. இதில் அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக அவர்களது வீட்டிலேயே அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.