கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு பெண்மணி உயிரிழப்பு! விழுப்புரத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

0
194

விழுப்புரத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்மணி ஒருவர், கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் அவரது பூதவுடல் விழுப்புரம் மின் மயானத்தில் வைத்து எரியூட்டப்பட்டது.

இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா பரவாமல் இருக்க ஊரடங்கு முழுமையாக செயல்படும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை விழுப்புரத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய அரசு தேர்வுத்துறை இணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பள்ளிக் கல்வித்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.