கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!!
கொரோனாவின் தாக்கம் சீனாவில் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக தெரிய வந்துள்ளது.
சீனாவின் உஹான் மாநிலத்தில் தொடங்கிய கொரோனா உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அதனையடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி மற்றும் மருந்துகளால் பரவல் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
2019- ஆம் ஆண்டு அந்த நாட்டில் கொரோனா தலை தூக்கியபோது கடுமையான ஊரடங்கினால் அந்த நாட்டில் பாதிப்பு அதிகம் நிகழவில்லை.இந்நிலையில் அங்கு ஊரடங்கு தளர்த்த பட்டதும் கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்ட துவங்கி விட்டது.
அடுத்த 3 மாதங்களில் சீனாவில் 60% பேர் இதனால் பாதிக்கப் பட்டு 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க கூடும் என ஏற்கனவே நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த டிசம்பர் 1 முதல் 20 ஆம் தேதி வரை 24 கோடியே 80 இலட்சம் பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அதிலும் ஒரே நாளில் மட்டும் 3 கோடியே 70 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சீனாவின் பீஜிங் மாகாணத்தில் உள்ள பீஜிங் யுனைடெட் மருத்துவ மனையின் மருத்துவர் ஹவ்ரட் பெர்ஷ்டின் கூறுகையில் எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் இது போன்ற ஒருபாதிப்பை தான் பார்த்தது இல்லை எனக் கூறினார்.எனது மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. ஏராளமானவர்கள் கொரோனா மற்றும் நிமோனியா அறிகுறியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் முதியவர்கள். மேலும் ஐசியு பிரிவு முழுவதும் நிரம்பி விட்டது.அவசர சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவு முழுவதும் நிரம்பி விட்டது. மேலும் குணமாகி செல்வோர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.கடந்த மாதத்தில் ஒரு கொரோனா நோயாளிகளும் இல்லாத நிலையில் இன்று டசன் கணக்கில் அதிகரித்து உள்ளனர்.
அதே நகரில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சோனியா ஜுடர்ட் கூறுகையில் சாதாரணமாக உள்ள எண்ணிக்கையை விட 5 முதல் 6 மடங்கு வரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் சராசரியாக வயது வரம்பு 40 ஆக இருந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் 70 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்தி இருக்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் மாத்திரையை விரும்புகின்றனர்.
பைசர் நிறுவனம் தயாரித்த பக்ஸ்லோவிட் என்ற மாத்திரை மருத்துவமனைகளில் குறைந்த கை இருப்பே உள்ளது. தடுப்பூசியின் தன்மையை மாத்திரையால் மாற்றி விடமுடியாது. மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ உள்கட்டமைப்பு அதன் எல்லையை தாண்டி விட்டது.
மேலும் பல ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் அவர்கள் பணிக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளனர்.மேலும் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் சுகாதார சேகரிப்பு நிறுவனம் சீனாவில் சராசரியாக சுமார் தினமும் 5000 பேர் உயிர் இழந்து வரலாம் என பகீர் தகவலை கிளப்பியுள்ளது. எனினும் சீனாவின் இந்த நிலையை கண்டு உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.