மீண்டும் தலைதூக்கும் நோய்தொற்று! கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம்!

0
145

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு சென்ற சில வாரங்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கொடைக்கானலில் இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கொடைக்கானலுக்கு கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பயணிகள் 72 மணி நேரத்திற்குள் நோய் தொற்று பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டும். கொடைக்கானலில் இருக்கின்ற முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், சுற்றுலாப்பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களான வட்டக் காணல் நீர்வீழ்ச்சி, ஐந்து வீடு நீர்வீழ்ச்சி, கூக்கால் நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு கொடைக்கானல் செல்பவர்கள் மலைப்பகுதியில் இருக்கின்ற பட்டா இடங்கள் மற்றும் அரசு வருவாய் நிலங்களில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலைப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட வாகனம் அதிவேகத்தில் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் கொடைக்கானல் நுழைவாயிலில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். வாகனங்களில் வருபவர்களை நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணித்து உரிய சான்றிதழ் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். அப்படி சான்று இல்லை என்றால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.