மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழலா..?? அதிகாரிகளை அலறவிட்ட விவசாயிகள்..!!
நம் நாட்டிலேயே மாட்டுத் தீவன ஊழல் வழக்கு பெரிய ஊழல் வழக்காக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாட்டு கொட்டகை அமைப்பதிலும் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள். மாடு வளர்க்க விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் மாட்டு கொட்டகை திட்டத்தில் இலவசமாக மாட்டு கொட்டகை அமைத்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஊராட்சி ஒன்றி விவசாயிகள் சிலர் மாட்டு கொட்டகை அமைத்துள்ளனர். ஆனால் இதில் அரசு நிர்ணயம் செய்த எடையை விட குறைவான எடையில் இரும்பு கம்பிகள் அமைத்தல், தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டுதல் ஆகியவை மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊழல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் கோபப்படாமல் மிகவும் பொறுமையாக நூதன முறையில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதன்படி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக மாடுகளை அழைத்து வந்து காய்கறிகள் அடங்கிய சீர்வரிசை தட்டுடன் மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாராட்டு விழா நடத்த முயன்றுள்ளனர்.
அதேபோல் அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு விழா நடத்த முயன்ற விவசாயிகளை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.