பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகின்ற செப்டம்பர் 17 முதல் துவங்க உள்ளதாக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களுக்கு
கே.பி.அன்பழகன் பேட்டி அளித்துள்ளார்.அவர் கூறியதாவது,கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது.பொறியியல் படிப்பில் சேர ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாற்றுத்திறனாளி,முன்னாள் ராணுவ வாரிசுகள் ஆகியோருக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் வாயிலாக நடைபெறும்.இருப்பினும் விளையாட்டுப்பிரிவில் உள்ள மாணவர்கள் நேரடியாக வரவேண்டும்.ஏ ஐ சி டி இ வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள்
கலந்தாய்வுகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளது.அதன்படி ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.மேலும் கலந்தாய்வும் இணையதளம் வாயிலாகவே நடைபெற உள்ளது.
கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக கல்லூரிகள் இருப்பதால் இந்த நிலைமை முடிந்த பிறகு வகுப்பறைகளை முறையாக சுத்தம் செய்த பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து படிக்கும் நிலை ஏற்படுத்தப்படும்.
கலந்தாய்வு தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள 044-22351014, 22351015, 22350523, 22350527, 22350520 தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள், 9445493718, 9445496318 மற்றும் 9445093618 ஆகிய எண்களை தொடர்புகொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் நம்பிக்கை இருப்பதாக திரு கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.