ஓமலூர் அருகே தம்பதி உடல் கருகி பலி! வாகனம் தீ பிடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்!
ஓமலூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதால், அந்த வாகனம் தீப்பிடித்தது. இதில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியானார்கள். இந்த விபத்தில் பிச்சைக்காரர் ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூர் தீவெட்டிபட்டியில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற பிச்சைக்காரரின் மீது கண்டெய்னர் லாரி மோதியுள்ளது.
இதில் அந்த பிச்சைக்காரர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.அதன் காரணமாக ஓட்டுநர் சாலையோரம் அதை நிறுத்தியுள்ளார். விபத்து நடந்தது இரவு நேரம் என்பதால் கண்டெய்னர் லாரிக்கு பின்னால், வந்த மற்ற வாகனங்கள் பிச்சைக்காரரின் உடல் மீது ஏறியே சென்றுள்ளன. அப்படி அவர் உடல் மீது ஏறிச் சென்ற வாகனங்களில் ஒரு கார் மட்டும் சற்று நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இதில் கார் தீ பிடித்துவிட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சோதனைச்சாவடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.காரில் இருந்த குழந்தை உட்பட அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்மற்றொருவரும் உயிரிழந்து உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த நபர் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்மலை என்பது தெரியவந்தது. காயமடைந்தவர்களில் பொன்மலை யின் மனைவி சகுந்தலா 56 வயது என்றும், நித்திய குமாரி 38 வயது என்றும், ஷோபனா 35 மற்றும் மித்திரன் ஐந்து வயது ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்மலையின் மனைவி சகுந்தலா சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பொன்மலை கிருஷ்ணகிரிக்கு குடும்பத்துடன் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.