Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக அரசால் நிம்மதி இழந்திருக்கும் தமிழக மக்கள்! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதோடு அன்றைய தினமே விரைவில் நிரந்தர பொது செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார் அதோடு இந்த நடவடிக்கைகள் 4 மாதங்களில் தொடங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கில் இடைக்கால பொதுச் செயலாளர் இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியை முன்வைத்து பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி நோய் தொற்று கால கட்டத்திலிருந்து பொதுமக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து, தற்போது தான் இயல்பு நிலைக்குப் திரும்பி உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பிரச்சனைகளால் மக்கள் மீண்டும் நிம்மதி இழந்துள்ளனர். பொதுமக்கள் துன்பத்தையும் வேதனையையும் அனுபவித்து வருகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள். ஆனால் இதுவரையில் நீட் தேர்வுக்காக எதுவும் செய்யவில்லை, எந்த விதமான போராட்டமும் நடத்தப்படவில்லை. என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று உத்தரவாதம் வழங்க நீதிபதி தெரிவித்ததாகவும் தடை பிறப்பிக்கப்படவில்லை. விசாரணை முடிவடையும் வரையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று உறுதி வழங்கினோம் என்று எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version