நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறந்தன! மீண்டும் ஆரம்பித்தது பேனர் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்? 

0
178

நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறந்தன! மீண்டும் ஆரம்பித்தது பேனர் கலாச்சாரம் முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?

தலைநகர் சென்னையில் மீண்டும் போஸ்டர் மற்றும் பேனர் கலாச்சாரம் துவங்கியுள்ளதால் மாநகரை அழகாக்கும் திட்டம் மற்றும் அதற்காக செலவிடப்படும் தொகை ஆகியவை வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேனர் வைப்பதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்  விதித்த தீர்மானங்கள் காற்றில் பறக்கின்றன.

சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சென்னை மாநகராட்சியை தனியார் பங்களிப்புடன் அழகாக்கி சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் முதல் கட்டமாக கண்ட இடங்களில் முகம் சுளிக்கும் வண்ணம்  பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அலங்கோலமான போஸ்டர்கள் அகற்றப்பட்டன. மேலும் போஸ்டர் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் அளிக்கப்பட்டது.

சென்னையில் கவுன்சிலர்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு 2 லட்சம் போஸ்டர்கள் 1000 க்கு மேற்பட்ட பேனர்கள், 100க்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள், மாநகராட்சியால் அழிக்கப்பட்டன. ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் கட்சியினர் யாரேனும் பேனர் கலாச்சாரத்தை கடைப்பிடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அப்போது முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் பொது இடங்களில் அழகாக்கும் வகையில் தனியாரின் பங்களிப்புடன் சென்னை மாநகரின் வரலாற்றை நினைவு கூறும் ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் மாநகரின் அழகை சீர்குலைக்க போஸ்டர் ஒட்டுபவர்கள் பேனர் வைப்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் மீது மாநகராட்சி சார்பில் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

இதனை அடுத்து 2022 மார்ச் மாதத்தில்  கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற பின்பு பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் அடிப்பது என படிப்படியாக மாநகராட்சியின் அழகை சீர்குலைக்கும் வகையில் விதிமீறல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்தும் சாலையோரங்களிலும் பேனர்கள் அமைத்துள்ளனர். மேலும் பொது இடங்களான பேருந்து நிறுத்தம் தனியார் இடங்கள், அரசு இடங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திமுகவினர் அதிகம் போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகமும் ஆளுங்கட்சி என்பதால் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும் பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் இது போன்ற பேனர் கலாச்சாரங்களினால் நீதிமன்றத்தின் உத்தரவுகள் காற்றில் பறக்கின்றன. மீண்டும் அபாயகரமாக வாகன ஓட்டிகளின் உயிருக்கு உலை வைக்கும் பேனர் கலாச்சாரங்களுக்கு எதிராக மீண்டும் முதல்வர் சாட்டையை சுழற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுகவினர் வைத்த பேனரினால் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததை தொடர்ந்து இனி பேனர் வைக்க மாட்டோம் என திமுக – அதிமுக கட்சிகளின் சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் மேல் இடத்தில் இருந்தும் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என்றும் கட்சியினருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் மதிக்காமல் திமுக அதிமுக கட்சிக்காரர்கள் பேனர் வைப்பது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி  அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள், முன்பெல்லாம் போஸ்டர் ஒட்டுபவர்கள் பேனர் வைப்பவர்கள் மீது  சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியினர்  சார்ந்த பேனர், போஸ்டர் என அனைத்திலும் கவுன்சிலர்கள் தலையிடுகின்றனர்.

மேலும் அவர்களை மீறி நடவடிக்கை எடுத்தால் எங்களை பணியிட மாறுதல் செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். அவர்களின் தலையீடு இல்லாமல் இருந்தால்தான் எங்களால் சரியான நடவடிக்கைகள் மேற்கொண்டு எங்கள் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.அதிகரித்து வரும் இந்த பேனர் போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க முதல்வர் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.