கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலிகுமரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நான்கு மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் நான்கு மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 90 வீரர்கள் கொண்ட குழுக்களும்,, கோவை மாவட்டத்தில் 30 கொண்ட பேரிடர் மீட்பு குழுவும் ஆயத்த நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தயாராக உள்ளனர்.
இதற்கிடையே தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலறி தெறித்து ஓடினர்.
இதில் 17 வயது சிறுவன் ஒருவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு 17 வயது சிறுவனை சடலமாக மீட்டுள்ளனர்.
உயிரிழந்த அந்த சிறுவன் நெல்லை ஸ்ரீராம் நகரை சேர்ந்த அஸ்வின் என்பது தெரியவந்துள்ளது. தீயணைப்புத்தூரில் சுமார் 3 மணி நேரம் போராடியும் சிறுவனை உயிருடன் மீட்க முடியாதது பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.