Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் இரு பிரபல கட்சிகளின் தொண்டர்கள் மோதல்!

MNM

MNM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளன. பல இடங்களில் திமுக – அதிமுக, திமுக – பாஜக இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் வகாப் என பெரும்புள்ளிகள் களமிறங்கியுள்ளதால் கடும் போட்டிகள் நிலவி வருகின்றன.

குறிப்பாக கமல் ஹாசன், வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் செய்த அன்றே இருவரும் ஆட்டோவில் பிரச்சாரம் செய்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. கமல் ஹாசன் வாக்கிங்கில் சென்று வாக்கு சேகரித்தால், வானதி சீனிவாசன் பூப்பந்து விளையாடி வாக்கு சேகரிக்கிறார். வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நமீதா, கெளதமி, ராதாரவி என நட்சத்திர பட்டாளங்கள் களத்தில் குதித்ததையடுத்து, கமலுக்கு ஆதரவாக பிரபல நடிகையும், அண்ணன் மகளுமான சுஹாசினி மணிரத்னம் நேற்று கோவை தெற்கில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கமல், வானதி இடையே நிலவி வரும் இந்த போட்டி மனப்பான்மை தற்போது தொண்டர்களிடையேயும் தொற்றிக்கொண்டுள்ளது. நேற்று கோவை தெற்கு தொகுதியில் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனுடன், அக்கட்சியின் தொண்டர்கள் கையில் கட்சி கொடியுடன் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது கோவை 100 அடி சாலையில் அமைந்துள்ள பாஜக பணிமனை முன்பு வந்த போது, அங்கிருந்த பாஜகவினர் கமலை பார்த்து ‘தாமரை, தாமரை’ என கோஷமிட்டனர்.

பதிலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் டார்ச் லைட், டார்ச் லைட் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டிலேயே இருகட்சியினரும் தங்களது சின்னங்களை சத்தமாக கூறி முழக்கமிட்டதால் சிறிது நேரத்திற்கு சலசலப்பு ஏற்பட்டது.

Exit mobile version