ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

0
134

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகத்தின் பார்வை முழுவதும் கொரோனா நோய் மீது மட்டுமே உள்ளது.

இதனால் கொரோனா நோய்க்கு மட்டுமே முன்னுரிமை அளித்து உலக நாடுகள் சிகிச்சையளித்து வருகின்றன. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு ஊரடங்கும் காசநோய் உள்ளவர்களை பெரிதும் பாதிக்கும் என்றும் இதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

காசநோய் தடுப்பு அமைப்பு, இம்பீரியல் கல்லூரி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை போன்ற சில நிறுவனங்கள் இணைந்து மாதிரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் “இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டும் ஒவ்வொரு மாத ஊரடங்கிற்கும் சுமார் 2020 முதல் 2025 வரை கூடுதலாக 40,685 பேர் காசநோயால் இறப்பார்கள்.

3 மாத ஊரடங்கால், 2021-ல் உலகளவில் காசநோய் தொற்று மற்றும் இறப்பு விகிதத்தில் 5 முதல் 8 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருப்போம். 2020 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில் காசநோயாளிகள் எண்ணிக்கை சுமார் 65 லட்சம் வரை கூடியிருக்கும். இறப்பு எண்ணிக்கை 14 லட்சமாக அதிகரித்து இருக்கும்.

2025-க்குள் காசநோய் இல்லா இந்தியா என்பதை நாம் நோக்கமாகக் கொண்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலைகளால் முன்னுரிமையை மாற்றக்கூடும். எனக் கூறியுள்ளனர்.

மற்றொரு ஆய்வில் கொரோனா நோய்த்தொற்று மலேரியா இறப்புகளை இரட்டிப்பாக்கும் என்றும், ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் 6 மாத இடையூறு ஏற்பட்டால் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் 50 லட்சத்திற்கு அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்காசிய இயக்குனரான பூனம் சிங் “கொரோனா நெருக்கடியை எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் தொடர்ந்து இயங்குவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் தொற்றுநோய் பரவலின் போது சுகாதார அமைப்புகள் அதனை சமாளிக்க திக்குமுக்காடிப் போனதால் தடுப்பூசியால் தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்த நோய்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.