மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்காக தான் பாஜக செய்யும் அனைத்து செயல்களையும் அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. மாநில உரிமைகளை பறிப்பது தொடர்பாக எந்த ஒரு கேள்வியையும் மத்திய அரசிடம் தமிழக ஆளும் தரப்பு கேட்டதில்லை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்காத முதலமைச்சர் இதுபோன்ற ஒரு சிறந்த சட்டம் இல்லை என்று அந்த சட்டத்தை ஆதரிக்கின்றார்.
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஆளும் தரப்பை அகற்றுவோம், பாஜகவை ஓரம் கட்டுவோம் என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்த இருக்கின்றது. இதற்காக வரும் 25-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த இருக்கின்றோம். இந்த இயக்கத்திலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாயிரம் குழுக்கள் ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் உடைய மக்கள் விரோத போக்கு தொடர்பாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றோம். கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மாதாமாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் முதல்வர் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இப்பொழுது 2500 ரூபாய் கொடுக்கின்றேன் என்று சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் முதல்வர் அறிவித்திருக்கிறார். பாஜக, மற்றும் அதிமுக .கூட்டணி கொள்கையற்ற கூட்டணி. ஒட்டுமொத்த தமிழக மக்களும் பாஜக, மற்றும் ,அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் தான் இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தேர்தலில் ஓட்டுகளை பிரிப்பதற்காக தான் பயன்படும். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால், அது திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை உருவாக்காது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தான் அது பலவீனமாகும் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார் கே.பாலகிருஷ்ணன்.