அழிவை நோக்கி செல்லும் கிராமம்! செய்வதறியாமல் சொந்த இடங்களை விட்டு வெளியேறும் மக்கள்!
இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் பல கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். இந்த மாநிலத்தின் ரிஷிகேஷ் -பத்ரிநாத் புனித யாத்திரைக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற நகரம். இந்த மலை கிராமத்தில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகர் ரிஷிகேஷ் பத்ரிநாத் சாலையில் அமைந்துள்ளதால் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம்.
மேலும் தவுலிகங்கா மற்றும் அலக்நந்தா ஆகிய இரண்டு நதிகள் விஷ்ணு பிரயாக்கில் ஒன்று சேர்ந்து இந்த நகர் வழியாக செல்வதால் இங்கு இயற்கை அழகுகள் ஏராளமாக கொட்டி கிடைக்கின்றன. இதனால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்கேயே தங்கியும் செல்கின்றனர்.
ரிஷிகேஷ் பத்ரிநாத் புனித யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் இந்த கிராமத்தை தாண்டி தான் செல்ல வேண்டும். மேலும் பனி நிறைந்த சிகரங்களில் ராணுவ பணிக்கு செல்லும் ராணுவ வீரர்களும் இந்த கிராமத்தில் வழியாக செல்லும் நெடுஞ்சாலையின் வழியாக தான் செல்ல வேண்டும். இவ்வளவு அழகுகள் சேர்ந்த இந்த ஜோஷிமத் நகரில் ஆபத்துக்கும் பஞ்சமில்லை. இங்கு அடிக்கடி நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இங்கு கட்டுமானம் தொடர்பான பணிகளில் கவனம் தேவை என எச்சரித்து இருந்தனர். இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் இங்கு ஏராளமான கட்டிடங்கள் கட்டுமானம் பெறத் துவங்கின.
இதன் விளைவாக ஆபத்து அதிகரிக்க தொடங்கியது. இங்கு அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட துவங்கின. இதனால் ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையின் பேரில் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அங்கு பல்வேறு வீடுகளில் பெரிதாக விரிசல்கள் விழத் தொடங்கின. மேலும் சிங்தார் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. நல்ல வேலையாக தங்கள் மக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதே போல் அங்கு பல கட்டிடங்களும் இடிந்து விழத் தொடங்கியுள்ளன.
இதனை அடுத்து அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்படுவதும், வீடுகள் இடிந்து விழுவதும், சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டதும், அந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. தங்கள் நகரம் மண்ணில் புதையுண்டு விடுமோ என்று பயந்தனர். இந்நிலையில் மாநில முதல்வர் புஷ்கர் சிங்க் தாமி வீடியோ கான்பிரஸ்சிங் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உடனடியாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். பின்னர் ஜோஷிமத் நகரில் இருந்த மக்களை பாதுகாப்பாக வேறொரு இடத்திற்கு வெளியேற்ற அவர் உத்தரவு விட்டார். அங்கிருந்த 600 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக அரசின் மூலம் வெளியேற்றப்பட்டு வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு அரசின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அங்கு குடியேற்றப்படுவர் என தெரிகிறது.ஆனால் அது எவ்வளவு காலத்தில் நடக்கும் என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.