Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவிழாவில்  கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்!

திருவிழாவில்  கிரேன் சரிந்து விபத்து! 4 பேர் பலியான பரிதாபம்! 

அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் பலியானார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி அடுத்த கீழ வீதி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதில் கொக்கி மாட்டி தொங்கியபடி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து சரிந்து விழுந்தது. கொக்கியில் தொங்கியபடி வந்த பக்தர்கள் கீழே விழுந்து பலத்த படுகாயம் அடைந்தனர். மேலும் கீழே நின்று கொண்டிருந்த பலருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் அந்த கிராமத்தைச் சார்ந்த முத்துக்குமார் வயது 39, பூபாலன் வயது 40, ஜோதி பாபு வயது 19, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள் மேலும் எட்டுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும், சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் சில பேர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கே சிலர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பேரப்பேரி கிராமத்தைச் சார்ந்த சின்னசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கிரேன் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version