வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கோடிகள்! குற்றப்பிரிவு போலீசார் செய்த அதிரடி!
உண்மையாக நாம் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்க வேண்டி வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இதற்கும் நாம் உண்மையான பத்திரங்கள் வைத்திருப்போம். அனைத்து தேவையான ஆதாரங்களையும் வைத்து இருப்போம்.
ஆனால் நம்மை மதிப்பார்கள் என்கிறீர்கள்? என்னவோ அவர்களிடம் இருந்து கடன் கேட்பது போல பேசுவார்கள். ஆனால் ஏமாற்றுப் பேர்வழிகளை மட்டும் எப்படி நம்பி அப்படி அவர்களிடம் பணத்தை வாரி இறைக்கிறார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதற்கு சில அதிகாரிகளும் உதவுவதன் காரணமாக அவர்களுக்கெல்லாம் விரைவில் அனைத்து சலுகைகளும் கிடைத்துவிடுகிறது.
உண்மையாக இருக்கும் நபர்களுக்கு தான் எதுவும் கிடைப்பதில்லை. அப்படி சென்னையில் தற்போது பல வங்கிகளில் கடன் வாங்குவதற்கு போலி ஆவணங்கள் மூலம் 6 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக ஐந்து வங்கிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே குற்றப்பிரிவு போலீசார் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் ஒரு புகார் மனு பதிவாகியுள்ளது. அதில் தனியார் நிறுவனம் மூலமாக கடன் பெற போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் இருந்து 1,51,77000 பணம் கடனாகப் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே வங்கி ஊழியர் நஜிமுதீன் என்பவர் போலியாக 44 வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளார் என்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் 15 பேருக்கு தனிநபர் கடன் என்று வழங்கியதும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கிய வண்டலூர் பாலாஜி நகரை சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவரும் கைதானார். இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் ராஜசேகர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் ரைஸ்மில் வாங்கவும், வீடு கட்டவும் என போலி ஆவணங்களை தயார் செய்து ஒரு கோடியே 43 லட்சத்து 23 ஆயிரம் கடன் வாங்கியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் முத்துவேல் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அதே போல் கரூர் வைஸ்யா வங்கியின் கிளை மேலாளர் அல்போன்ஸ் ராஜேஷ் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தார். அதன்படி வேளச்சேரியை சேர்ந்த பிராங்க்ளின் என்ற பெண் தனியார் நிறுவனம் நடத்துவதாகவும், வீடு கட்டவும் என போலி ஆவணங்களை கொடுத்து நாற்பத்தி ஒன்பது லட்சத்து 12 ஆயிரத்தை கடன் வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அவரது கணவர் தங்கராஜ் மற்றும் கோவிந்தராஜ், சையது அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் உதவி பொது மேலாளர் முருகனும் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் சியாமளா தேவி என்பவர் வீட்டுக் கடன் பெறுவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து 25 லட்சத்தை வங்கியில் ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு அந்த வங்கியின் கிளை மேலாளர் பாலாஜியும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் விருகம்பாக்கம் கிளையிலும் மோசடி நடந்துள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து ஒரு கோடியே 95 லட்சம் வரை வீட்டு கடன் பெற முயற்சி செய்ததாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே முகமது கனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அதன் பின்பு சிறையில் அடைத்துள்ளனர். இது போன்ற மோசடிகளை தடுக்க வங்கி மேலாளர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டனர். அவர்கள் பத்திரத்தை உண்மையாக பரிசோதித்தால் போதும் அது உண்மையா? பொய்யா? என்பது தெரிந்துவிடும். ஆனால் போலிகளை மதிப்பவர்கள் உண்மைகளை என்றும் மதிப்பதில்லை.