கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். கறிவேப்பிலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் தலைமுடி நன்றாக செழித்து வளரும்.
தேவையான பொருள்கள்
கறிவேப்பிலை – 4 கப்
சின்ன வெங்காயம் – 2 கப்
முந்திரி – 40 கிராம்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 8 கிராம்
பூண்டு – 8 கிராம்
சோம்பு – சிறிது
நல்லெண்ணெய் – 50 மில்லி
கடுகு – சிறிது
வெந்தயம் – 10 கிராம்
தக்காளி (அரைத்தது) – 2 கப்
மஞ்சள் தூள் – சிறிது
புளித் தண்ணீர் – 2 கப்
தனியா – 20 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, சோம்பு, சின்ன வெங்காயம், கடுகு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், இதை ஒரு மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்க வேண்டும்.
இதன் பிறகு, அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கியபின் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் வறுத்து அரைத்து வைத்த மல்லியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இதனையடுத்து, அதில் புளித் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்னர், அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கடைசியாக உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான கறிவேப்பிலை கெட்டிக் குழம்பு ரெடியாகிவிடும்.